×

நகர் முழுவதும் நாள்கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பை துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சிவகங்கை, மார்ச் 2: சிவகங்கை நகர் முழுவதும் அள்ளப்படாமல் தேங்கும் குப்பைகளால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இங்கு முக்கிய இடங்களில் மட்டும் லாரிகளில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வகையில் இரும்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான தெருக்களில் இதுபோல் தொட்டிகள் இல்லாமல் தெருவின் ஒரு பகுதி குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு அங்கிருந்து குப்பைகள் எடுத்துச்செல்லப்படும்.

தினந்தோறும் லாரிகளில் அள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படாமல் நான்கு நாட்கள், ஒரு வாரம் இடைவெளி விட்டு குப்பைகள் அள்ளப்படுகிறது. இதனால் நகர் முழுவதும் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நேரு பஜார் பகுதியில் காய்கறி, மீன் மார்க்கெட், மளிகை கடைகள் உள்ளன. இப்பகுதியில் அதிகப்படியான குப்பைகள் சேரும். இதுபோல் உழவர் சந்தை, மஜீத்ரோடு, வேலாயுதசாமி கோவில் அருகில், சிவன் கோவில் அருகே, சரோஜினி தெரு என நகரின் முக்கிய பகுதிகளில் அதிகப்படியான குப்பைகள் சேரும் இடங்களில் தினந்தோறும் குப்பைகள் அள்ளப்படாதால் சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகள் கழிவு நீர் கால்வாய்களுக்குள் செல்கிறது. இதனால் நகர் முழுவதும் பல இடங்களில் கழிவு நீர் கால்வாய்களுக்கும் குப்பைகள் தேங்கி நிற்கிறது. குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாடு, நாய், பன்றி உள்ளிட்டவை குப்பைகளை சாலை முழுவதும் இழுத்து செல்கின்றன. குறைவான வாகனங்களை வைத்து குப்பைகளை அள்ளுவதால் பல நாட்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், குப்பைகளை தினந்தோறும் அள்ளாததால் பல தெருக்களில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலை முழுவதும் குப்பைகள் பரவிக்கிடக்கின்றன. இந்த குப்பைகள் கழிவுநீர் கால்வாய்க்குள் சென்று கழிவுநீர் செல்ல முடியாமல் அடைத்து நிற்கின்றன. இதனால் மழை பெய்யும் போது மழை நீரோடு கழிவு நீரும் சாலைகளில் செல்கிறது. உடனடியாக தினந்தோறும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : city ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து